மனைவி, மாமியாரை கொடூரமாக வெட்டி சரித்த அரக்கன்... சடலங்களைப் பார்த்து ஸ்டன் ஆன ராமநாதபுரம்...!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் மின்சாரப் பணியாளராக (எலக்ட்ரிஷியன்) பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
செல்லமுத்துவுக்கு ஷர்மிளா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுப் பணியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அவர், குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், செல்லமுத்துவுக்கும் அவரது மனைவி ஷர்மிளாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இன்று அந்த தகராறு மீண்டும் முற்றிய நிலையில், மனைவி ஷர்மிளா மற்றும் மாமியார் பத்மாவதி ஆகிய இருவரையும் வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து வெளியேறிய செல்லமுத்து அருகில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: குடியைக் கெடுத்த குடி...!! - தலைக்கேறிய மதுபோதை... வேலூரில் பெற்ற தந்தைக்கு மகனால் நேர்ந்த பயங்கரம்...!
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கேணிக்கரை காவல் நிலைய போலீசார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் அருகே வைகை நகர் பகுதியில், மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நிறைவடைந்த பின்னரே இந்த இரட்டைக் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரவுடி கொலையில் இளம் பெண் கைது... குடும்பமே சேர்ந்து செய்த சதி... ‘மனைவிகளுக்கு’ வலைவீச்சு...!