மெட்ரோ ரயில் வாக்குறுதி பிளாக்மெயில் அல்ல! மார் தட்டும் தமிழிசை சௌந்தர்ராஜன்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி பிளாக்மெயில் இல்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இன்று தொகுதி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாக்மெயில் என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த தமிழிசை மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் எனச் சொல்வது பிளாக்மெயில் கிடையாது. இது மக்களின் நலனுக்கான வளர்ச்சித் திட்டம்" என்று விளக்கமளித்தார். பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட ஏராளமான ரயில்வே வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதற்கு அமைச்சர் துரைமுருகன் அவர்களின் ஒரு நிகழ்வை அவர் உதாரணமாகக் கூறினார். வேலூருக்குப் பயணிக்க இருந்த அமைச்சர் துரைமுருகன், வந்தே பாரத் ரயிலில் ஏறினால் சீக்கிரம் சென்றுவிடலாம் எனக் குறிப்பிட்டதிலிருந்தே மத்திய அரசு திட்டங்களின் அருமை தெரிகிறது என அவர் விமர்சித்தார். மேலும், பாஜக அரசின் திட்டங்களால் விருதுநகர் மற்றும் சிவகாசி போன்ற மாவட்டங்கள் தொழில் ரீதியாக முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!
மயிலாப்பூர் தொகுதி தனக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்த தமிழிசை கடந்த முறை மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தொகுதிக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் அநீதி இழைத்துள்ளார். மயிலாப்பூர் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்று புகார் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணியின் பலத்தால் மயிலாப்பூர் தொகுதியை நிச்சயம் கைப்பற்றுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதற்கு முறையாக ஆதரவு தருவதில்லை" என்று அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் தொடங்கிய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருவித பதற்றத்திலேயே இருப்பதாகவும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
தன்னைப் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் வந்து ஆதரிப்பதைக் காழ்ப்புணர்வோடு பார்க்காமல், விருந்தோம்பல் பண்போடு வரவேற்க வேண்டும் என்றும் அவர் திமுகவிற்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கப்பல் கனவு கரைஞ்சது..! வலியுடன் வழி தேடுகிறேன்... மாணவி கொலையில் ஆதங்கத்தை கொட்டிய தமிழிசை..!!