செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!
மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் பாசன பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாசனத்துக்கான ஆயத்தப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இந்த முடிவை அறிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்தது. கர்நாடகாவிலிருந்து வரும் நீர்வரத்தும் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் பாரம்பரிய தேதியில் அணையைத் திறக்க முடியவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் அண்மை நாட்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருவதால் பாசனத்திற்கு நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 1ஆம் தேதி நேரில் வந்து மேட்டூர் அணையைத் திறந்து வைக்க உள்ளார். அணையின் நீர் இருப்பு மற்றும் வரும் நீர்வரத்தைக் கருத்தில் கொண்டு சுமார் 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படும். குடிநீர் தேவைகளையும் டெல்டா பாசனத் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பும் இந்த முடிவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேட்டூர் அணை திறப்பு..! CM விஜய் வருகை.? ஐ.ஜி. அதிரடி ஆய்வு..!!
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும்போது சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட சுமார் 12 மாவட்டங்களில் பரவியுள்ள 16 முதல் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். குறுவை சாகுபடி ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நீர் சம்பா சாகுபடிக்கு பெரிதும் உதவும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!