மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!
மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளர் மரகதம் அல்ல., விஜய் தான் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் மரகதம் குமரவேல் போட்டியிடும் நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தனித் தொகுதியில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், வெற்றிக்குப் பிறகு சில வாரங்களிலேயே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்த ராஜினாமாவால் தொகுதி காலியானதால் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மரகதம் குமரவேல் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
1982 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2006 முதல் 2011 வரை திருப்போரூர் ஒன்றியக் குழு உறுப்பினராகவும், பின்னர் ஒன்றியத் தலைவராகவும் பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 2026 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு 69,284 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் எழில் கேத்ரினை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அம்லு பொன்மலர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே அதிமுகவில் ஏற்பட்ட உள் முரண்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக மரகதம் குமரவேல் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் பதவி விலகி தவெகவில் இணைந்தனர். இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலை ஏற்பட்டது. தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களிடம் குதிரை பேரும் நடந்ததாக கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமரவேலுக்கு ஆதரவாக அமைச்சர் ஆனந்த் பேசினார். அப்போது, உண்மையாக சொல்கிறேன் என் சகோதரிக்கு நாங்கள் எதுவுமே கொடுக்கவில்லை. நாங்களே பெட்டி வாங்கவில்லை என தெரிவித்தார்.
அப்புறம் எப்படி பெட்டி கொடுப்போம்? என்றும் கேட்டார். மரகதம் குமரவேல் இங்கு வேட்பாளர் அல்ல, தலைவர் விஜய் தான் வேட்பாளர் என வாக்களிக்க வேண்டும். உங்கள் பிரச்சினை அனைத்தையும் விரைவில் தீர்த்து வைக்கிறோம் என மதுராந்தகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டு... விஜய்யின் மின்வாரிய விசிட்டை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!