முதல்ல வீட்டை விட்டு வெளியே வாங்க உதயநிதி! உங்க அப்பா ஆட்சினு நினைச்சீங்களா? நிர்மல்குமார் விளாசல்!
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் - அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பதிலடி.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மின்துறை விநியோக நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின் உபகரண வழங்குநர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மின்துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், “கடந்த ஆட்சியில் ஒருசில நிறுவனங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, விதிமீறல்களைச் செய்தன. அவர்களால் தான் தமிழ்நாடு மின்துறை சரிவைச் சந்தித்தது. அவர்கள் செய்த முறைகேடுகளுக்கான ஆதாரங்களை நாங்கள் திரட்டியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் வகித்த செயல் தலைவர் பதவி மீண்டும் வேணும்! திமுகவில் உதயநிதி, கனிமொழி தரப்பு போர்க்கொடி!
டெண்டர் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அடிப்படை விஷயங்களைச் சரி செய்து கொண்டிருக்கிறோம். அனைத்தும் சரியான பிறகு வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர்கள் தொடரும்” என்று பதிலளித்தார்.
சென்னையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை குறித்த கேள்விக்கு, “7 ரோந்து வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளோம். மின்தடை ஏற்படும் இடங்களுக்கு உடனடியாகச் சென்று பிரச்னையைச் சரி செய்கிறோம். சில இடங்களில் வேண்டுமென்றே டிரான்ஸ்பார்மர்களை செயலிழக்கச் செய்துள்ளனர். அவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம்” என்றார்.
பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசிய அமைச்சர், “கோவை சம்பவத்தில் முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மதுரை கொலை வழக்கில் 3 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் குறித்து பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “உதயநிதி ஸ்டாலின் முதலில் வீட்டை விட்டு வெளியே வரட்டும். இன்னும் அவரது அப்பா ஆட்சி நடைபெறுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு கடைக்கோடி கிராமம் வரை மக்கள் வாக்கு அளித்துள்ளனர். மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தீர்மானித்துவிட்டனர்” என்று கடுமையாக விளாசினார்.
இதையும் படிங்க: திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!