200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!
தற்போது மின்சார வாரியத்தில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல ஆண்டுகளாக செலவுகள் மட்டும் அதிகரித்துள்ள நிலையில், புதிய ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சென்னையில் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதற்கட்டமாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நிலைமை எவ்வாறு உள்ளது, எந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன, டெண்டர்கள் எவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன, எந்த செயல்முறைகள் நடைமுறையில் உள்ளன என்பன குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இன்றைய நிலையில் மின்சார வாரியம் எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். வாரியத்தின் கடன் சுமையும் தெரியும். இந்த மின்சார வாரியத்தை லாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பல இடங்களில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் பல விவகாரங்கள் தற்போது சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனிமேல் அத்தகைய தவறுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இதையும் படிங்க: கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!
கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார வாரியத்தை முழுமையாக சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி மின்சார வாரியத்தை முழுமையாக புதுப்பித்து, புதிய புத்துணர்ச்சியுடன் செயல்படச் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மாதந்தோறும் வசூலிக்கும் முறையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
தற்போது மின்சார வாரியத்தில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல ஆண்டுகளாக செலவுகள் மட்டும் அதிகரித்துள்ள நிலையில், புதிய ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது குறைவான ஊழியர்களே உள்ளனர்.
மாதாந்திர கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமெனில் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று மீட்டர் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்குத் தேவையான பணியாளர்கள் தற்போது போதுமான அளவில் இல்லை. எனவே முதலில் ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு நியாயமான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம். அனைத்து சீரமைப்புப் பணிகளும் நிறைவடைந்த பின், பொதுமக்களுக்கு அதிக பயன் தரும் வகையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
200 யூனிட் இலவச மின்சார திட்டம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 10ஆம் தேதி முதலே அதற்கான ஆணை அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மாதாந்திர மின்கட்டண வசூல் முறையை கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதற்கு முன் ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டியது அவசியம்.
தற்போது மின்சார வாரியம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ளது. இந்த வாரியத்தை முழுமையாக சீரமைத்து, லாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.
முந்தைய நிர்வாக காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களால் இந்த நிறுவனம் பலவீனமடைந்துள்ளது. அதை மீண்டும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பின்னர் பொதுமக்கள் அதிக அளவில் பயனடையும் வகையில் தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.
200 யூனிட் இலவச மின்சார திட்டம் இந்த மாத மின்கட்டணத்தில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் கையெழுத்திட்ட உடனேயே அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது.
இவ்வளவு கடன் சுமை இருந்தபோதும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை நீண்டகாலம் செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, ‘கண்டிப்பாக முடியும்’ என்பதே எங்கள் பதில். அதற்கான சீரமைப்புப் பணிகளே தற்போது நடைபெற்று வருகின்றன.
தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் கூறியதுபோல், ஊழல், முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்களை கட்டுப்படுத்தினாலே அனைத்து துறைகளையும் சீரமைக்க முடியும். அதற்கான முயற்சிகளை முழு தீவிரத்துடன் மேற்கொண்டு வருகிறோம். அவை நிச்சயமாக நல்லபடியாக அமையும் என்றார்.
இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!