×
 

ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்... கோவை மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

கோவை அவினாசி மேம்பாலம் பணிகள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, அதனை தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

கோவை அவினாசி மேம்பாலம் மற்றும் காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகளை நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறும் போது : கோவையில் மிகப்பெரிய அளவில் பெரியார் பெயரில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்க கடந்த நவ.6 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் நேரில் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து விரைந்து பணிகளை முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான் மூன்று முறை நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

கோவையில் முதல்வர் உத்தரவின் பேரில் அமைய உள்ள இந்த நூலகம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 7 தளங்களுடன் அமைகிறது. கட்டுமான பணிகளுக்கு ரூ.245 கோடி, 90 ஆயிரம் புத்தகங்களுக்கு ரூ.50 கோடி, இதர கணினிகளுக்கு ரூ.5 கோடி என ரூ.300 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தனித்தனியாக அறைகள் அமைகிறது.

இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசலில் சிறுவன் பலி... அவனுக்காக ரூ.100 கோடி பணம் சேர்த்தேன்; ஆனால்... தந்தை கதறல்!!

அதே போல தொழில்சார் பயிற்சி மையம், 360 இருக்கைகளுடன் உள்ளரங்கம், 4 நகரும் படிக்கட்டுகள், தனி புத்தக வாசிப்பு அறைகள் என பிரமாண்டமாக அமைய உள்ளது. இப்பணிகளை வரும் டிச.30க்கும் முடித்து கொடுப்பதாக ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு முதல்வர் இந்த நூலகத்தை திறந்து வைப்பார். 

அதே போல கோவை அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரயில்வே கிராசிங் ஏரியாவில் பணிகளை மேற்கொள்ள ரயில்வே துறையிடம் அனுமதி கிடைத்து விட்டது, விரைவில் அப்பணிகள் நடைபெறும். வரும் ஜூலை.30க்குள் பணிகள் நிறைவடைந்து முதல்வர் இப்பாலத்தை திறந்து வைப்பார். 


கடந்த 4 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து முதல்வர் கேட்டறியும் ஆய்வு கூட்டத்தில் முதலாக கோவையில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் குறித்து தான் கேட்டறிந்தார். பின்னர் அவினாசி மேம்பால பணிகள் குறித்து கேட்டறிந்தார். 
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒன்றிய அரசின் சாலை மற்றும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை நேரில் அழைத்து பேசி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து பணிகளை முடிக்க அறிவுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. பயம் காட்டும் தமிழ்நாடு வெதர்மேனின் அலர்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share