×
 

கோவை பெரியார் அறிவுலகம்: பிப்ரவரி 10-க்குள் பணிகள் நிறைவடையும்.. அமைச்சர் எ.வ.வேலு அதிரடி!

கோவையில் எட்டடுக்கு மாடிகளுடன் கட்டப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக, கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகக் கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார். சுமார் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள இந்த அறிவுத் திருக்கோவிலை, வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் உறுதியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "எதிர்காலத்தில் அறிவுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே மதுரையைத் தொடர்ந்து கோவையிலும் இந்த உலகத்தரம் வாய்ந்த நூலகத்தை அரசு அமைத்து வருகிறது. இதில் 245 கோடி ரூபாய் கட்டிடத்திற்கும், 50 கோடி ரூபாய் புத்தகங்களுக்கும், 5 கோடி ரூபாய் கணினி சாதனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டுத் தளங்களைக் கொண்ட இந்த நூலகத்தில் டிஜிட்டல் உலகம், அறிவியல் மையம், போட்டித் தேர்வுகளுக்கான தனிப்பிரிவு, குழந்தைகள் உலகம் எனப் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. விமான நிலையத்தின் தடையில்லாச் சான்று உட்பட அனைத்து சட்டரீதியான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: செல்போன் ஆதாரங்களுடன் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

தொடர்ந்து கோவையின் உட்கட்டமைப்புப் பணிகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அவிநாசி மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்கும் பணிகள் கட்டாயம் நடைபெறும் என்றும், இதற்காகத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், மேற்குப் புறவழிச்சாலைப் பணிகளில் 90 சதவீத முதற்கட்டப் பணிகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்டப் பணிகளுக்கான நிர்வாக அனுமதி நிதித்துறையிடம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

"கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடன் சுமைகளைச் சமாளித்துக் கொண்டே, திராவிட மாடல் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. வானதி சீனிவாசன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக நிறைவடையும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இறுதியில் அரசியல் தொடர்பான கேள்விக்கு, "திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது, 2026-லும் மு.க.ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" எனத் திட்டவட்டமாகக் கூறி ஆய்வை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: ஐந்தடுக்கு பாதுகாப்பில் கோவை!  துணை குடியரசு தலைவர் வருகையால் ட்ரோன்களுக்கு தடை! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share