தமிழக மக்களுக்கு ஷாக்... மீண்டும் உயருகிறதா மின் கட்டணம்?... அமைச்சர் நிர்மல் குமார் வைத்த ட்விஸ்ட்...!
மின்கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தகவல்
தமிழகம் முழுவதும் மின்தடை பிரச்சனை அதிகரித்து, பல மாவட்டங்களில் மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோடை காலத்தை முன்னிட்டு மாநிலத்தின் மின் தேவை திடீரென அதிகரித்துள்ள நிலையில், அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வரும் மின்தடைகளை உடனடியாக சரிசெய்வது, மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது மற்றும் மின் விநியோகத்தை சீரமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
மேலும், ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வை அமல்படுத்தும் வகையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த நடைமுறையில் மாற்றங்கள் செய்ய முடியுமா என்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வரே இதை செய்யுங்க..! மாசம் 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்கணும்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "மின்கட்டண திருத்தம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு சதவீதம் உயர்த்த வேண்டும் என்பது குறித்து 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவில் வழிகாட்டுதல்கள் உள்ளன. கடந்த ஆண்டு 3.16 சதவீத உயர்வு இருந்த நிலையில், இந்த ஆண்டு 3.86 சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, முதலமைச்சரின் ஒப்புதலின் அடிப்படையில் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 6 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும் நடைமுறையை முந்தைய அரசு கொண்டு வந்தது. அந்த கொள்கை நுகர்வோர் மட்டுமின்றி, வணிக நிறுவனங்கள், உயரழுத்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் தொழில் துறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
எனவே, குறிப்பாக பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது" என்று தெரிவித்தார். மின்கட்டண உயர்வு தொடர்பான இறுதி முடிவை முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “மன்னிப்பு கேட்கல...” - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!