×
 
☰

புதுக்கோட்டை வரும் முதல்வர்.! பொறாமையில் பொங்கும் எதிர்க்கட்சிகள்..! அமைச்சர் பர்வேஸ் பேட்டி..!!

முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகை தொடர்பான விமர்சனங்கள் குறித்து அமைச்சர் பர்வேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், புதுக்கோட்டைக்கு முதலமைச்சர் வருகை தொடர்பாக எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார். திமுகவினர் திமுக கொண்டுவந்த திட்டங்களைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் வருவதாக விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களது சொந்தப் பணத்தில் திட்டங்களைக் கொண்டுவந்தார்களா என்று கேள்வி எழுப்பினார்.

அரசுப் பணத்தில்தான் புதிய பேருந்து நிலையத்தையும் உள்விளையாட்டு அரங்கையும் கட்டியுள்ளனர் என்றும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் திமுகவினரே தொடங்கி வைத்ததில்லையா என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.முதலமைச்சரைப் புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவது மக்களிடம் அவருக்கு உள்ள எழுச்சியான ஆதரவு காரணமாகவே எதிர்க்கட்சியினர் வன்மத்திலும் பொறாமையிலும் பேசி வருகின்றனர் என்று அமைச்சர் கூறினார். எதிர்க்கட்சியினர் பாராட்ட மாட்டார்கள். நாளை மறுநாள் முதலமைச்சர் வருவதற்காகப் பொறாமையில் விமர்சனம் செய்கின்றனர். அவர்களது விமர்சனத்திற்குப் பதிலடியை நாங்கள் செயலில் காட்டுவோம் என்று அவர் உறுதியளித்தார்.

நாளை மறுநாள் புதுக்கோட்டைக்கு வரும் முதலமைச்சர் புதிய பேருந்து நிலையத்தை நேரடியாகச் சென்று திறந்து வைக்க உள்ளார். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு காணொளி மூலம் உள்விளையாட்டு அரங்கைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பதினாயிரம் பேருக்கு உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்து இருநூறு முதல் இரண்டாயிரம் பயனாளிகள் நேரடியாகப் பங்கேற்க உள்ளனர். நூறு கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகளும் புதிய திட்டங்களும் அன்று வழங்கப்படும்.இது அரசு நிகழ்ச்சி என்பதால் கட்சிக் கொடிகளோ விளம்பரப் பதாகைகளோ வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

முதலமைச்சர் எளிமையாக வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுச் செல்வார். ரோடு ஷோ செல்ல இதுவரை திட்டமிடப்படவில்லை. ஆனால் அவர் வரும் வழியில் மக்கள் இருந்தால் அவர்களைச் சந்திப்பார். பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதற்காகக் காவல்துறையினர் சாலையின் இருபுறமும் பாரிகேடுகளை அமைத்து வருகின்றனர்.முதலமைச்சரிடம் பேருந்து நிலையத்தைத் திறப்பதற்கு வருகை தருமாறு கோரியபோது அவர் வருகை தருவதாக ஒப்புக்கொண்டார் என்று அமைச்சர் கூறினார். மாவட்ட அமைச்சர் என்ற முறையில் மாவட்டத்திற்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவருவேன் என்று முகமது பர்வேஸ் உறுதியளித்தார்.

 

 

 

இதையும் படிங்க: சிறைகளில் அதிரடி சீர்திருத்தம்..? குழுவின் பரிந்துரைக்காக காத்திருக்கும் தமிழக அரசு.! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share