அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!
கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் லாக் அப் டெத் அல்ல என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது லாக்கப் டெத் நடந்தால் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். சில சம்பவங்களில் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. அதை நாங்கள் இல்லை என்று கூறவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் போன்ற வழக்குகளில் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் உயிரோடு உள்ளாரா இல்லையா எங்கு உள்ளனர் என்பது குறித்து ஆட்கொணர்வு மனு அளித்து அதன் பின்னர் அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த சம்பவத்தில் அப்படி இல்லை . தமிழ்நாடு அரசு இதுபோன்ற வழக்குகளில் முறையாக கையாளவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. உயர்நீதிமன்ற விமர்சனத்திற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. தவறு செய்யும் யாரையும் நாங்கள் காப்பாற்றவில்லை. அது காவல்துறையாக இருந்தாலும் சரி அவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் அவ்வாறு அவர்கள் கூறவில்லை.
இதையும் படிங்க: மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!
பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும். ஆனால் நம்முடைய காவல்துறையை போன்று சிறப்பாக செயல்படக்கூடிய காவல்துறை எங்கும் இல்லை. ஒருவர் நகையை காணவில்லை என்று காவல்துறையிடம் கூறுகிறார் இவரிடம் தான் நகை உள்ளது என்றும் கூறுகிறார். அதன் அடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை அழைத்து காவல்துறையின் விசாரணை செய்கின்றனர்.
அங்கு சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது, உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்தாலும் சரி இந்த வழக்கில் யாரையும் நாங்கள் விட்டு வைக்க போவது கிடையாது, அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் லாக் அப் டெத் அல்ல. இதனை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கொலை விவகாரம்.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக வெற்றிக் கழகம்!!