திராவிட கொத்தடிமையா? உழைப்பு, விசுவாசத்துக்கு கிடைத்தது பதவி.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ரகுபதி..!
நாங்கள் உறங்கவில்லை. அன்றைக்கும் விழித்திருக்கிறோம். இன்றைக்கும் விழித்திருக்கிறோம். ஆனால், எடப்பாடிபழனிசாமிதான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
சேலம் அருகே 3 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்று அன்றிலிருந்து இன்று வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. அது அனைத்து தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் செய்தியாக வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக கூறுகிறார்.
நாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்று தெரியாமல் இருக்கின்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவர் தான். ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் தி.மு.க.வின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி என கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்வதில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்லூரி செல்லும் பெண்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம். தூங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதெல்லாம் புரியாது. யாராவது அவரை தட்டி எழுப்பிச் சொல்லுங்கள் எனக் கூறி இருந்தார் அமைச்சர் ரகுபதி.
இதையும் படிங்க: அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "நான் தூங்கிக் கொண்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறுகிறார். நான் விழித்துக்கொண்டு சிறப்பாக செயல்படுவதால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ரகுபதி இப்படிச் சொல்கிறார். அரசும், காவல்துறையும், முதலமைச்சரும் தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறார்.
அமைச்சர் ரகுபதியை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். ரகுபதியை அமைச்சராகி அழகு பார்த்ததே அதிமுக தான். ரகுபதியை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி, ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் கொடுத்து இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். அவர் தற்போது நன்றியை எல்லாம் மறந்து திமுகவிற்கு அடிமைக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ரகுபதி பெயரைச் சொல்லிக் காட்டமாக விமர்சித்துப் பேசிய அடுத்த சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து அமைச்சர்கள் இலாகா மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அதிமுகவில் நான் இருந்தபோது எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாகத்தான் இருந்தேன். ஜெயலலிதாவை பொதுச்செயலராக ஆக்கியது நாங்கள்தான். இரவு, பகல் பாராது உழைத்திருக்கிறோம். அந்த உழைப்புக்காகத்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நாங்கள் உறங்கவில்லை. அன்றைக்கும் விழித்திருக்கிறோம். இன்றைக்கும் விழித்திருக்கிறோம். ஆனால், எடப்பாடிபழனிசாமிதான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் பாகம் குறித்து முதல்வர் அறிவித்திருக்கிறார். கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். இரண்டாம் பாகம் எல்லாம் தோல்வியில் போனதாகவும் சொல்கிறார்கள். திராவிட மாடலுக்கு இரண்டாம் பாகம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே மீண்டும் தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அந்த இரண்டாம் பாகம் இருக்கும் என்றார் ரகுபதி.
இதையும் படிங்க: பியூஸைப் பிடுங்கியும் குறையாத வாய்க்கொழுப்பு... எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்த பொன்முடி...!