எடப்பாடி ஒரு காபி பேஸ்ட் எக்ஸ்பர்ட்! எடப்பாடியின் ரூ.2000 அறிவிப்பை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி!!
அதிமுக அறிவித்துள்ள ரூ.2000 மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் திமுக அரசின் திட்டங்களை 'காப்பி பேஸ்ட்' என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
மகளிருக்கு 2000 ரூபாய் தருவோம் என்கிற எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு திமுகவின் திட்டத்தை காபி அடித்ததுதான் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். "பந்தி போடுவதற்கு முன்பே எடப்பாடி இலை போட்டு உட்கார்ந்துள்ளார்" என அவர் கிண்டல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு ₹3.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபப் பணிகளை இன்று அமைச்சர்கள் ரகுபதி மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடினார்.
அதிமுக அறிவித்துள்ள 'ஆண்களுக்கு இலவசப் பேருந்து' மற்றும் 'மகளிருக்கு ₹2000 உரிமைத் தொகை' போன்ற அறிவிப்புகளை 'காபி-பேஸ்ட்' என வர்ணித்த அமைச்சர், "கடந்த தேர்தலின் போது நாங்கள் உரிமைத் தொகை தருவோம் என்று சொன்னபோது, 'குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல ஆசை வார்த்தை கூறுகிறார்கள்' என்று சொன்ன அதே எடப்பாடியின் வாய்தான் இன்று 2000 ரூபாய் தருவதாகக் கூறுகிறது. அவர் இப்போது 'பொய்பாடி பழனிசாமியாக' மாறிவிட்டார். உங்களால் கொடுக்க முடியாது என்று சொன்னவரே இன்று 2000 தருவேன் எனச் சொல்வதிலிருந்தே, முதல்வர் ஸ்டாலினின் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இது திராவிட மாடல் ஆட்சி 2.0-விற்கு கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சிந்தையில் ஒன்றுமில்லை!" எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை கிண்டல் செய்த சேகர் பாபு!
எடப்பாடி பழனிசாமி கடந்த காலங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் தருவதாகக் கூறிவிட்டு, தேர்தலுக்குப் பின் அதனை நிறுத்திவிட்டதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், "எடப்பாடி வந்தால் இப்போது கிடைக்கும் 1000 ரூபாயையும் நிறுத்திவிடுவார் என்றுதான் தாய்மார்கள் எண்ணுகிறார்கள். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், அவசர அவசரமாகப் பந்திக்கு முந்திக்கொண்டு ஓடுகிறார் எடப்பாடி. ஆனால் அங்கு இன்னும் பந்தியே போடவில்லை. பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து சாப்பிட்டுவிட்டுப் போவோம். எடப்பாடி சொல்வதைச் செய்ய மாட்டார், நாங்கள் செய்வதைச் சொல்வோம்" என பதிலடி கொடுத்தார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் எங்களுடன் இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், முதலமைச்சர் யாரையும் கையை விட்டுவிட மாட்டார் என்றும் குறிப்பிட்டார். அதேபோல் டிடிவி தினகரன் குறித்துப் பேசுகையில், "யார் அந்த டிடிவி தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. ஏதோ 'புளூக்கில்' (Fluke) வந்தவர் அவர். அவர் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. வரவிருக்கும் தேர்தலில் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்குப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்" என ஆணித்தரமாகக் கூறினார். முன்னதாக, ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபப் பணிகள் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டுத் திறக்கப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க: சேலத்தில் நடந்த ரகசிய மீட்டிங்! இபிஎஸ்-ஐ சந்தித்த பாமக டீம் - திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஸ்கெட்ச்..!