×
 

SBI மேலாளர் விவகாரம்: அழகிரி மகள் மீது கிரிமினல் கேஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

எஸ்பிஐ மண்டல முதன்மை மேலாளர் நமச்சிவாயம் ஜூலை 21 அன்று சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

சென்னை அடையாறு பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் என்ஆர்ஐ கிளை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளும் கலைஞர் கருணாநிதியின் பேத்தியுமான கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் நீண்ட நாட்களாக பழுதடைந்து பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. 

வங்கி நிர்வாகம் கட்டிடப் பராமரிப்புப் பிரதிநிதிகள் மூலம் பலமுறை தொடர்புகொண்டு பழுது நீக்கக் கோரியும் பதில் கிடைக்காததால், கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கயல்விழியைத் தொலைபேசியில் அழைத்து விவகாரத்தை எடுத்துரைத்தார். இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி ஜூலை 20 அன்று வங்கிக் கிளைக்கு நேரில் வந்து மேலாளர் அறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஏற்பட்ட கடும் வாதத்தின் போது அவர் மேலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கன்னத்தில் அறைந்து தாக்கி மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் வங்கியின் சிசிடிவி கேமராவில் பதிவாகி, பின்னர் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எஸ்பிஐ மண்டல முதன்மை மேலாளர் நமச்சிவாயம் ஜூலை 21 அன்று சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..! GST வசூல் குறைவால் ஆபத்து..!! டிஆர்பி ராஜா எச்சரிக்கை..!!

அதன் அடிப்படையில் காவல்துறையினர் பாரதீய நியாய சன்ஹிதாவின் 296(b) (தகாத வார்த்தைகள்), 329(4) (அத்துமீறல்), 115(2) (காயப்படுத்துதல்), 351(2) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் போது கயல்விழி காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்ட பிறகு அவர் முறையாகக் கைது செய்யப்பட்டு, குற்றங்கள் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனைக்கு உட்பட்டவை என்பதால் காவல்நிலை ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டார். நகரை விட்டுச் செல்லும் முன் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சிவில் தன்மை கொண்ட லிஃப்ட் பராமரிப்பு விவகாரத்திற்கு கிரிமினல் சாயம் பூசப்பட்டுள்ளதாகவும், மேலாளர் தான் தகாத வார்த்தைகளால் திட்டி பின்னர் தவறான புகார் அளித்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்க்காத நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டுள்ளார். 

நீதிபதி இளந்திரையன் முன் விசாரணை நடந்தபோது, இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கயல்விழி தரப்பு தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி, சென்னை காவல்துறை மற்றும் எஸ்பிஐ மண்டல தலைமை மேலாளருக்குப் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

இதையும் படிங்க: வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share