×
 

இந்தி திணிப்பை ஏற்கிறாரா EPS..? 3வது மொழி கட்டாயம்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

இந்தி திணிப்பை ஏற்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல என்றும் அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சி எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

“இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்” என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான NDA அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். “மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சி என்றும் கூறினார்.

தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை என்றும் இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது எனவும் கேட்டுள்ளார். இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா என்றும் இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திரிஷா கூட  விஜய் இருக்கட்டும் ஆனால்... தவெக தலைமைக்கு திமுக வேட்பாளர் பகிரங்க எச்சரிக்கை...!

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத, தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே மத்திய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைப்பது கபட நாடகத்தின் உச்சம் என்றார். இந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும் என்றார். 

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான, ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தியைத் திணிப்பதில் மத்திய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது என்றும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், அதன் NDA கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா அல்லது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா என்றும் கேட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: அடடே..! களைக்கட்டியாச்சு தேர்தல் திருவிழா... டிரம்ஸ் அடித்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share