தொகுதி மறுவரையறை சட்டத்தை மொத்தமா திரும்பப் பெறனும்..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!
தொகுதி மறு வரையறையை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் என்றும் கூறினார்.
நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார். ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் என்றார்.
இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டோக்கன்களை அதிமுகவினர் பதுக்கி வைத்ததாக புகார்..! போலீஸ் கண்முன்னே வெடித்த பிரச்சனை..!
அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. மத்திய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறினார். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நேரு, இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறினார். தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!