அனைவரும் பாராட்டும் பட்ஜெட்... மீண்டும் திராவிட மாடல் 2.0 தான்... முதல்வர் ஸ்டாலின் உறுதி..!
அனைவரும் பாராட்டும் பட்ஜெட் என இன்றைய இடைக்கால நிதிநிலை அறிக்கை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். உரையின் தொடக்கத்தில் திமுக அரசின் சாதனைகளை விரிவாக பட்டியலிட்டார். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படும் திட்டங்களை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 கொடுப்பனவு தொடங்கி, பின்னர் ரூ.2,000 கோடைக்கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது என்று உணர்ச்சிமயமாக பேசினார்.
விடியல் பேருந்து திட்டத்தால் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள் என்றும் விளக்கினார். பெண் ஓதுவார் நியமனம் போன்ற சாதனைகளையும் நினைவுகூர்ந்தார்.நிதி நிலைமை பற்றி பேசும்போது, மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயற்கையாக நிதி நெருக்கடியை உருவாக்க முயல்வதாக கடுமையான விமர்சனம் வைத்தார். முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் மறுப்பு, மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி வெளியீட்டில் தாமதம், வரி வருவாய் குறைப்பு போன்றவற்றை சுட்டிக்காட்டினார்.
16வது நிதி ஆணைய அறிக்கை தமிழகத்துக்கு ஏமாற்றமளிப்பதாகவும், வரி பகிர்வு 41% என்ற அளவில் தொடர்வது ஏற்க முடியாதது என்றும் கூறினார். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி மானியங்கள் ரூ.24,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்றைய நிதிநிலை அறிக்கையை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க. அழகிரியின் வலது கரம் அதிமுகவில் ஐக்கியம்... முன்னாள் துணை மேயர் மன்னன் இபிஎஸ் உடன் சந்திப்பு..!
இதுதான் வளர்ச்சி என்றும் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம் என்றும் கூறினார். ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!