தமிழ்நாடு போராடும் என காட்டிய வீரச்சுடர்கள்... வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முதல்வர் புகழாரம்..!
வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்
ஜனவரி 3 ஆம் தேதி, தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட இரு மாமனிதர்களான வீரமங்கை ராணி வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவர்கள் இருவரும் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். இவர்களின் வீரச் செயல்கள் தமிழர்களின் தியாகத்தையும், தைரியத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.ராணி வேலு நாச்சியார் 1730 ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ராமநாதபுரத்தில் பிறந்தார். ராமநாதபுரம் அரசர் செல்லமுத்து சேதுபதி மற்றும் ராணி சக்கந்திமுத்தாள் ஆகியோரின் ஒரே மகளாகப் பிறந்த இவர், ஆண் வாரிசு இல்லாததால் இளவரசனைப் போலவே வளர்க்கப்பட்டார். வாள், வில், வாள்வீச்சு, குதிரையேற்றம், சிலம்பம் போன்ற போர்க்கலைகளில் சிறந்த பயிற்சி பெற்றார். பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சிவகங்கை அரசர் முத்துவடுகநாத தேவரை மணந்து, அவரது மறைவுக்குப் பிறகு ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்திருந்த அரசர்களால் சிவகங்கை ஆக்கிரமிக்கப்பட்டபோது, தனது மகளுடன் தப்பி ஹைதர் அலியிடம் உதவி கேட்டு, மருது சகோதரர்களுடன் இணைந்து போரிட்டு சிவகங்கையை மீட்டெடுத்தார்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்ட முதல் பெண் அரசி என்ற பெருமைக்குரியவர். "வீரமங்கை" என்று போற்றப்படும் இவரது தைரியம், இன்றும் தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.அதே நாளில், 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பாளையக்காரரான இவர், ஆங்கிலேயர்களின் வரி கொள்ளையை எதிர்த்து தீரமாக நின்றார். கப்பம் கட்ட மறுத்ததால் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். முதல் போரில் ஆங்கிலேய தளபதி ஆலனை தோற்கடித்து விரட்டினார்.
வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... ரொம்ப முக்கியம்..! வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்...!
இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு என்று கூறியுள்ளார். அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்ததாகவும் தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் 2026 தேர்தல் களம்..!! மக்களிடம் கருத்து கேட்க புது செயலி..!! நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!