எப்போது வரும்? என்னென்ன தரும்? பிரதமர் மோடியை கேள்விகளால் துளைத்த முதல்வர் ஸ்டாலின்..!
துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், பிரதமர் மோடி தமிழ்நாடு பக்கம் வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் அவருக்கு பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும் என்று கேட்டுள்ளார். Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும் என்று கேட்டார்.
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும் என்ற சரமாரி கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் முன் வைத்துள்ளார். தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும் என்று கேட்டார். 100 நாள் வேலை திட்டத்தைதொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் புதிய திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும் என்றும் கேட்டுள்ளார்.
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக மத்திய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும் என்றும் இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும் எனவும் அவர் கேட்டார்.
இதையும் படிங்க: 28வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு..!! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும் என்று கேட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும் என்றும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உணர்வே போற்றி... பொங்கல் விழாவில் பாடி அசத்திய G.V..! கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்த பிரதமர் மோடி..!