234 தொகுதிகளும் என் தொகுதி தான்… சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி..!!
234 தொகுதிகளும் என் தொகுதி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இப்போது நடைபெற்று வரும் இடைக்கால பட்ஜெட் விவாதம் மிகுந்த எதிர்பார்ப்புடனும், கடுமையான வார்த்தைப் போராட்டங்களுடனும் நிறைந்திருக்கிறது. இது வெறும் நிதி அறிக்கை விவாதம் மட்டுமல்ல. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பான கடைசி பெரிய அரசியல் அரங்கு என்பதால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் பலத்தை முழுமையாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 17-ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன் மொத்த அளவு சுமார் 4.67 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பகுதியில் 3.44 லட்சம் கோடி ரூபாய் வரை எதிர்பார்க்கப்படுகிறது. செலவினங்கள் 3.93 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளன. வேளாண் துறைக்கு தனியாக இடைக்கால பட்ஜெட் ஒன்றையும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் 234 தொகுதிகளையும் தனது தொகுதிகளாக பாவித்து பணியாற்றி வருகிறேன் என்று கூறினார். தமிழ்நாட்டை இன்னும் வலிமையாக்கும் நம்பிக்கையை பெற்றுள்ளோம் என்றும் மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களை தொடர்வோம் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடும் இன்றி பணியாற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதனை எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை...! தமிழ்நாடே கொந்தளிக்கும்... பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை..!!
5 ஆண்டுகள் ஆட்சி குறித்த மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். அடுத்த 2 மாதங்களில் மீண்டும் வருவோம் என்று தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன் என்றார். எனக்கும் ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரனும் கிடையாது. குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைப்பிடித்த எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரச்ச மாவையே அரைக்கும் பட்ஜெட்..!! DMK ALL FAIL... நயினார் விளாசல்..!!