100 நாள் வேலைக்கு மூடு விழா… பாஜக ஆதரவாளர்களே கழுவி ஊற்றும் நிலை… விளாசிய முதல்வர்…!
100 நாள் வேலை திட்டத்திற்கு பாஜக மூடு விழா நடத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் மலைப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற வரும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது வரலாற்றுச் சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை என்றும் திமுகவுக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினரை கொடுத்து முதல் மாவட்டம் திருவண்ணாமலை எனவும் தெரிவித்தார். ஆர்வத்துடன் திரண்டிருக்கும் உங்களை பார்க்கும் போது புது எனர்ஜி வருகிறது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் என்று தெரிவித்தார். ஒவ்வொருவரையும் சென்று சேரும் வகையில் திமுகவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
திருவண்ணாமலையில் 21,463 மாணவிகள் புதுமைப் பெண்களாய் 19376 மாணவர்கள் தமிழ் புதல்வர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார். புதுமைப்பெண்கள் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 900 கோடிமுறை மகளிர் கட்டணம் இல்லாமல் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயணம் செய்துள்ளனர் என்றும் 1.30 கோடி மகளிர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும் திருவண்ணாமலையில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதாகவும் சொல்லச் சொல்ல பெருமை கொள்ளக் கூடிய வகையில் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
4 ஆண்டுகளில் நாடு போற்றும் திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டு வந்திருப்பதாகவும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார். திமுக அரசு செயல்படுத்திய நான்கு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதம் 4000 ரூபாய் மிச்சம் ஆகிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திருவண்ணாமலை ஏந்தல் கிராமத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 ஏக்கரில் புதிய சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். செங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 18 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார். வேளாண் சேவைகளை ஒரே இடத்தில் பெரும் வகையில் மடையூரில் 3.94 கோடி ரூபாயில் மையம் அமைக்கப்படும் என்று கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கோவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!
ஜி எஸ் டி யால் மாநிலத்திற்கு வரி உரிமையும் இல்லை வருவாயும் இல்லை என்றும் கூறினார். பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து சரணாகதி அடைந்து விட்டனர் என்றும் தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்து தெரிந்து கொண்டு வட மாநிலத்தவர்கள் நமக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை பரப்பினால் வடமாநிலங்களில் ஓட்டு கிடைக்கும் என பாஜக நம்புவதாக குற்றம் சாட்டினார். நான் திமுக ஆதரவாளன் இல்லை ஆனால் நான் முதல்வன் சிறந்த திட்டம் என பாராட்டுவதாகவும் கூறினார். தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரது கண்களை கூசச் செய்கிறது., அதனால் தான் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்று குற்றம் சாட்டினார். தமிழக அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கினாலும் நமக்கு ஆதரவாக வடமாநில இளைஞர்கள் வீடியோ பதிவிடுவதாகவும் குறிப்பிட்டு பேசினார். பாஜக ஆதரவாளர்களே தற்போது மத்திய அரசை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் விமர்சித்து பேசினார். 100 நாள் வேலை திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு மூடு விழா நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்த 100 நாள் வேலை திட்டத்தை முழுவதுமாக சிதைத்து விட்டார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயி வேஷம் போட்டு அரசியல் செய்வாங்க... விவசாய எதிர்ப்பு சட்டத்தையும் ஆதரிப்பாங்க... சூசகமாக பேசிய முதல்வர்...!