×
 

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு! ஸ்ரீ வஸ்தவாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்..!

சென்னை உயர்நீதி மன்றத்தின் 54 ஆவது தலைமை நீதிபதியாக நீதியரசர் எம் எம் ஸ்ரீவஸ்தவா பதவியேற்றார்.

சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவின் மிக முக்கியமான நீதிமன்றங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மேல்முறையீட்டு அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம். இவர் 2024 செப்டம்பர் 27 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். ஆனால், 2025 ஜூலை 14 அன்று, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் பேரில், நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

அதேநேரம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா 1961 ஜூன் 29 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஜவுரா என்ற சிறிய நகரத்தில் பிறந்தவர். இவர் 1982இல் கலைப் பட்டமும் (B.A. Hons.), 1985இல் சட்ட இளங்கலைப் பட்டமும் (LL.B.) பெற்றவர். மேலும், 1991இல் ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் (LL.M.) பெற்றார். தற்போது, "மத்தியப் பிரதேசத்தில் மருத்துவத் தவறுகள்" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டு வருகிறார்.

நீதிபதி ஸ்ரீவஸ்தவா 1985 நவம்பர் 22 அன்று மத்தியப் பிரதேச மாநில வழக்கறிஞர் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 2007இல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2009இல் நிரந்தர நீதிபதியாக உயர்ந்தார். அவரது நீதித்துறைப் பயணத்தில் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கவுஹாத்தி, மற்றும் பாட்னா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. 2023இல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மன்னிச்சிடுங்க.. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச் செயலாளர்..! வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்..!

பின்னர் 2025இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி MM ஸ்ரீ வஸ்தவாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்த வழக்கு... குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share