திடீர் மாற்றம்..!! திமுக - மநீம உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! பிப்.27ல் நடக்கும் என அறிவிப்பு..!!
பிப்ரவரி 27ஆம் தேதி திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சி உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018-இல் நடிகர் கமல்ஹாசன் தொடங்கியபோது, அது தனித்து நின்று அரசியல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சில வாக்குகளைப் பெற்றாலும், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு, கட்சியின் அணுகுமுறை மாறத் தொடங்கியது. குறிப்பாக 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போதே மநீம முழுமையாக கூட்டணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, திமுக 2025-இல் நடைபெற்ற ராஜ்யசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடத்தை ஒதுக்கியது.
அதன்படி கமல்ஹாசன் ராஜ்யசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இரு தரப்புக்கும் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்தியது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மநீமவின் இணைப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இருந்தன. சமீபத்தில் தேமுதிகவும் இணைந்தது. இந்தச் சூழலில் மக்கள் நீதி மய்யம் முழுமையாக இடம்பெற்றுள்ளது.
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மநீம தரப்பில் 15 தொகுதிகளை கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், அம்பத்தூர், தாம்பரம், திருச்சி கிழக்கு, மதுரை மத்தி போன்ற நகர்ப்புற மற்றும் முக்கிய தொகுதிகள் அதில் அடங்கியுள்ளன.
இதையும் படிங்க: தீவிரவாதிகளின் புகலிடமா தமிழகம்? பயமா இருக்கு..!! எஸ். பி. வேலுமணி ஆதங்கம்..!!
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 27 ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் களம்..! திமுக - மமக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!