"நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வான்சுக்கைத் திமுக மக்களவைக் கொறடா ஆ.ராசா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் மன உளைச்சலைத் தேசம் முழுவதும் காண முடிகிறது என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் மோடி அரசு பெரும் விளைவுகளைச் சந்திக்கும் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கல்வி ஆர்வலர் சோனம் வான்சுக் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து திமுகவின் தார்மீக ஆதரவை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆ.ராசா, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தொலைநோக்குப் பார்வையுடன் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானமும், சட்டமும் இயற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தச் சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட போதிலும், மோடி அரசு மற்றும் அதன் கீழ் உள்ள ஆளுநர் இதற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சூழலில் தான் டெல்லியில் சோனம் வான்சுக் மற்றும் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சோனம் வான்சுக்கின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி டெல்லியில் சோனம் வான்சுக்கை நேரில் சந்தித்து, திமுகவின் தார்மீக மற்றும் அரசியல் ஒத்துழைப்பைத் தெரிவித்ததாக ஆ.ராசா கூறினார். இந்த ஆதரவை உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட சோனம் வான்சுக், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களையும் சந்தித்து மு.க.ஸ்டாலினின் கவலையையும், ஆதரவையும் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்தார். இப்போராட்டத்தின் போது, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை வலுவாக எழுப்ப வேண்டும் என்று சோனம் வான்சுக் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நீட் முறைகேடு மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளை திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள் என்றும் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: தலைமை செயலாளர் சாய்குமார் பணிக்காலம் நீட்டிப்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு!
தொடர்ந்து பேசிய ஆ.ராசா, சோனம் வான்சுக்கை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு தாம் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார். அதற்குப் பதில் அளித்த சோனம் வான்சுக், "தான் இறந்தால் தான் ஒரு விழிப்புணர்வும் எழுச்சியும் ஏற்படும் என்றால், அதற்காக எனது உயிரைத் தருவதற்கும் தயாராக இருக்கிறேன்" என்று கூறிய போது தமக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இந்த விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் பாஜாக அரசுக்கு எதிராகத் தங்களின் நாடாளுமன்றப் போராட்டம் தொடரும் என்றும் அவர் வன்மையாகப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: தவெக அரசிடமிருந்து எதிர்பார்ப்பதே தவறு! மும்மொழி கொள்கை விவகாரத்தில் கனிமொழி எம்.பி பேட்டி!