×
 

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஜூன் - செப்டம்பர் மாதங்களில் 'எல்-நினோ' தாக்கம் உருவாக வாய்ப்பு; நாடு முழுவதும் வழக்கத்தை விடக் குறைவான மழைப்பொழிவு.

இந்திய விவசாயத்திற்கும், நீர் மேலாண்மைக்கும் ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கவலையளிக்கும் முன்னறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலமானது, நாடு முழுவதும் வழக்கத்தை விடக் குறைவாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விடக் குறைவாகவே பதிவாகும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு போதுமான அளவு இருக்காது என்பதால், இது குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வானிலையில் 'நியூட்ரல்' (Neutral) நிலை நீடிக்கும். ஆனால், பருவமழை தீவிரமடையும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் 'எல்-நினோ' நிலை உருவாக 70 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எல்-நினோ உருவாவது பொதுவாக இந்தியப் பருவமழைக்குச் சாதகமற்ற சூழலை உருவாக்கி, மழைப்பொழிவைக் குறைக்கும் காரணியாக அமைகிறது.

இதையும் படிங்க: இன்று 4 மாவட்டங்களில் கனமழை! தமிழகத்தில் நீடிக்கும் கோடை மழை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு பருவமழை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், மழைக்குறைவு குறித்த இந்த முன்னறிவிப்பு மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும், வறட்சியைச் சமாளிப்பதற்கும் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இந்த அறிவிப்பு குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மானாவாரி விவசாயத்தைச் சார்ந்துள்ள பகுதிகள் இந்தப் பருவமழைக்குறைவால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

பருவமழை குறித்த இரண்டாம் கட்ட முன்னறிவிப்பு மே மாத இறுதியில் வெளியாகும் என்றும், அப்போது மழைப்பொழிவு மண்டல வாரியாக எப்படி இருக்கும் என்பது குறித்துத் தெளிவான விபரங்கள் தெரியவரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெயில் கொடுமைக்கு இடையே குட் நியூஸ்! ஏப்ரல் 5 முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share