பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா..?? வாகன ஓட்டிகளே.. பயப்பட வேண்டாம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??
வதந்திகளை நம்பி சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு பெட்ரோல், டீசல் வாங்குவதாகவும், அது தேவையில்லை என்றும் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் உள்நாட்டிலும் எரிபொருள் தொடர்பான பொருட்களின் விலை மற்றும் விநியோகத்தில் பிரதிபலிக்கும் என அஞ்சும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
இது பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் விரைவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற பதற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த அச்சத்துக்கு எந்த அடிப்படையும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “நாட்டின் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்புடன் சீராக இயங்கி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் சேமிக்கப்பட்டுள்ளன. எந்தவித தட்டுப்பாடும் இல்லை.
இதையும் படிங்க: உச்சகட்ட போர் பதற்றம்..!! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா..?? வெளியான பரபரப்பு தகவல்..!!
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயல்பான முறையில் செயல்பட்டு வருகின்றன” என்றார். மேலும், இந்த விவகாரத்தில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று வலியுறுத்திய சுஜாதா சர்மா, “சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு அதிக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கி வருவதாக தகவல்கள் வருகின்றன. இது முற்றிலும் தேவையற்றது. அரசு எரிபொருள் விநியோகத்தை சீராக நடைபெறச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்தும் அவர் விளக்கினார். “புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு வரும் எரிவாயு இறக்குமதி சில அளவில் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், உள்நாட்டில் இதுவரை எந்தவித தட்டுப்பாடும் பதிவாகவில்லை. சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.
மத்திய அரசின் இந்த உறுதியான நிலைப்பாடு, மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் துறையில் போதுமான இருப்பு இருப்பதால், தேவையின்றி அவசரம் காட்டி வாங்குவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில், சர்வதேச சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை உன்னிப்பாக கண்காணித்து, உள்நாட்டு தேவைகளை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியாக இருந்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பி செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!