50% வரியை போட சொன்னதே மோடிதான்... போர்க்கொடி தூக்கிய ஆ.ராசா!
மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை அதானி மற்றும் அம்பானிக்கு விற்பதாக ஆ.ராசா குற்றம் சாட்டினார்.
ஆகஸ்ட் 27 முதல், அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது. இந்த முடிவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தையும், இருதரப்பு உறவுகளையும் கணிசமாக பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பு, முதலில் 25 சதவீதமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட்டு, மொத்தமாக 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த முடிவு, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவளிப்பதாக அமெரிக்கா கருதுவதால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பு, இந்தியாவின் ஏற்றுமதி துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு இந்தியா 87.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது, இதில் ஜவுளி, ஆடைகள், நகைகள், கடல் உணவுகள், தோல் பொருட்கள், மற்றும் ரசாயனங்கள் போன்றவை முக்கியமானவை. இந்த பொருட்களில் கிட்டத்தட்ட பாதி, அதாவது சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, இந்த புதிய வரியால் பாதிக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டின் திருப்பூர் பகுதியைச் சார்ந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில், இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 30 சதவீதத்தை உள்ளடக்கியது, இந்த வரியால் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: பெருந்துயரம்... மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் பலி! நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்..!
இந்த நிலையில் அமெரிக்க வரிவிதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக எம்.பி., ஆ. ராசா தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், சு.வெங்கடேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஆ. ராசா, மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள் என்றும் அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள் எனவும் கூறினார். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50% வரி என்றும் 50% வரியை போட சொன்னதே மோடி தான் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியை ஆ.ராசா எம்.பி. விளாசினார்.
இதையும் படிங்க: போராடும் மக்களைப் பார்க்க டைம் இல்ல! மோனிகா பாட்டுக்கு வைப் பண்ண டைம் இருக்கா? ஜெயக்குமார் சாடல்..!