அரசியலில் கண்ணியம் தேவை: அவதூறு பேசுவோர் மீது கட்சிகள் நடவடிக்கை எடுக்க எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்!
பெண்கள் மீதான ஆபாசக் கருத்துகளை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் குறித்து அரசியல் தொடர்புடைய நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் மிகக் கீழ்த்தரமான ஆபாசக் கருத்துகளைப் பதிவிட்டிருந்தும், அதன் மீது காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிப்பதாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அரசியல் களத்தில் பெண்கள் தொடர்ந்து சந்தித்து வரும் ஆபாசப் பேச்சுக்கள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் குறித்துக் கடுமையான கவலையை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், என்னை உள்ளடக்கிய பல பெண் தலைவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆபாச வார்த்தைகளும் வக்கிரமான கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. இந்தத் தலைமுறையினர் நாகரிகமான, கண்ணியமான அரசியலையே எதிர்பார்க்கின்றனர்; ஆனால் அரசியல் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் இத்தகைய அருவருக்கத்தக்க கருத்துகளை இன்றைய இளம் தலைமுறையினரும், ஜென்-இசட் தலைமுறையினரும் பார்க்கும்போது, அதை ஒரு சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவர்களும் அதே போன்ற இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தும் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
பெண்கள் காலம் காலமாக இதுபோன்ற வக்கிரப் பேச்சுகளைக் கடந்து சென்றுவிட்டாலும், இனியும் இத்தகைய இழிவான செயல்களைப் பொறுத்துக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாது. இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த அரசியல் தளத்தையுமே கீழ்த்தரத்திற்கு இழுத்துச் செல்கிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்; தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசினால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அந்தந்த அரசியல் கட்சிகளே கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இது இந்தியா முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்னை என்றாலும், தமிழ்நாடு இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து ஒட்டுமொத்த தேசத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்: காங்கிரஸுக்கு கிரண் ரிஜிஜூ பதிலடி! சிறப்புக் கூட்டத்தொடர் கூடுமா?
இதையும் படிங்க: ஒருபக்கம் SIR போராட்டம்.. மறுபக்கம் வியட்நாமில் ராகுலா? கிண்டலடிக்கும் பாஜக.. காங்கிரஸ் பதிலடி!!