தந்தை நினைவிடத்திற்கு ஓடோடி சென்ற கனிமொழி... தனது பிறந்தநாளில் அண்ணா, கலைஞருக்கு மரியாதை...!
தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மரியாதை செலுத்தினார்.
கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாகத் திகழ்கிறது. 1968 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் பிறந்த கனிமொழி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகள். அவரது குடும்பப் பின்னணி அரசியலால் நிரம்பியிருந்தாலும், கனிமொழி தனது தொடக்கக் கால வாழ்க்கையை இதழியல் மற்றும் இலக்கியத் துறைகளில் செலுத்தினார்.
கனிமொழியின் அரசியல் பயணம் 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ராஜ்யசபாவில் திமுகவின் தலைவராகவும், குழு தலைவராகவும் பணியாற்றினார். கட்சியில் இலக்கிய அணி தலைவராகவும், மகளிரணி செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தார். பெண்களை அரசியலுக்கு ஊக்குவிப்பது, பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்புவது, கலை இலக்கியத்தை ஊக்குவிப்பது போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கினார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை 'கலைஞர் 85' என்ற பெயரில் ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்க உதவினார். 2019 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தூத்துக்குடி தொகுதியிலிருந்து முதல் முறையாக நேரடித் தேர்தலில் போட்டியிட்டு, அத்தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல். பின்னர் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்று, தற்போது லோக்சபா உறுப்பினராக உள்ளார்.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை... பிரத்யேக செயலியை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்...!
திமுகவில் துணைப் பொதுச்செயலாளராகவும், நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் பொறுப்புகளை வகிக்கிறார். பாராளுமன்றத்தில் ரசாயனம் மற்றும் உரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்ற நிலைக்குழுக்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.கனிமொழி அவர்கள் பெண் அதிகாரமளிப்பு, சமூக நீதி, தமிழ் கலாச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தனது தந்தை கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் கனிமொழி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது.... மத்திய அமைச்சர் கருத்துக்கு கனிமொழி பதிலடி..!