சிக்கலில் MRS & MR.. கேஸ் போட்ட இளையராஜா! நடிகை வனிதா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!
மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்து, தயாரித்த Mrs & Mr திரைப்படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வனிதாவுடன் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஷகீலா, ஸ்ரீமன், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார், மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தத் திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்று அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் 1990ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தப் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, இளையராஜாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறி உள்ளதாகவும், இளையராஜாவின் கூற்றுப்படி, இந்தப் பாடலைப் பயன்படுத்துவதற்கு உரிய ஒப்பந்தம் அல்லது அனுமதி பெறப்படவில்லை, இது காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கை அவசர முறையீடாக தாக்கல் செய்தார். இந்த மனுவில், பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும், நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் இளையராஜா கோரி இருந்தார். அப்போது, உடனடி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனவும், வழக்கு ஜூலை 14 ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாடலை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் காப்புரிமை பெறப்பட்டதாக வனிதா தரப்பில் கூறப்படும் நிலையில், நீதிமன்றத்தின் மூலமாக உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆயிரம் கிலோ மாம்பழம் கிஃப்டு.. பிரதமர் மோடிக்கு ஐஸ் வைக்கும் யூனுஸ்.. நட்பை வலுவாக்க திட்டம்!!
இதையும் படிங்க: தவெக போராட்டத்தின் போது முண்டியடித்த தொண்டர்கள்... பொது சொத்துக்கள் சேதாரம் குறித்து ஆய்வு