"உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!
நாகர்கோவிலில் விசாரணை கைதி உயிரிழந்த நிலையில் அவரது உடலை வாங்காமல் இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீதிபதி தலைமையில் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக் குளம் அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி வர்மன். இவர் அந்த பகுதியில் பொட்டிக்கடை நடத்தி வந்த நிலையில் குட்கா விற்பனை செய்ததாக போலீசார் அவரை கடந்த 9 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணை கைதியாக சிறையில் இருந்த சபரி வர்மன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை பார்ப்பதற்கு சென்றபோது போலீசார் அனுமதி மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மருத்துவமனையில் நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் இன்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைச்சாலையில் உயிரிழந்ததால் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்., பிரேத பரிசோதனை அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்., உயிரிழந்த நபரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சபரி வர்மனின் உறவினர்கள் முன் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: போட்டித் தேர்வு வினாத்தாள்கள் விற்கப்படும் மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டம் - எம்பி ஜோதிமணி அழைப்பு!
இந்த நிலையில் இன்று மீண்டும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உயிரிழந்த நபரின் உறவினர்களை சந்தித்து நடந்தவை குறித்து கேட்டு அறிந்தார். அரசு உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 65+ மூத்த குடிமக்களே கவனம்..!! திருப்பதி தரிசன விதிகளில் புதிய அப்டேட்..!!