×
 
☰

கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் மீண்டும் பணத்தை கொட்டி வீடியோ! யூடியூபர் மதுமிதா வீடியோவால் சர்ச்சை!

மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொள்ளை சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு 10 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொள்ளை நடந்த சில மணி நேரங்களில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மதுமிதா சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நகைகள் மற்றும் பணக்கட்டுகளுடன் அவர் வெளியிடும் வீடியோக்களுக்கு கணிசமான பார்வைகள் கிடைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வினோத் குமார் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த சுமார் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாகர்கோவில் யூடியூபர் வீட்டில் 120 பவுன் தங்கம் அபேஸ்! பீரோவை உடைத்து தூக்கிய மர்ம கும்பல்! போலீஸ் விசாரணை!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சிசிடிவி காட்சியில், ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஒருவர் செல்வதும், முதுகில் பை வைத்திருப்பதும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஒருவர் தோட்டியோடு பகுதி நோக்கிச் செல்வது உள்ளிட்ட காட்சிகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொள்ளை சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு 10 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில் பணத்தை தன் மீது கொட்டிக்கொண்டு நடனமாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ஒரு வீடியோவை மட்டும் சுமார் 40 மணி நேரத்தில் 39 லட்சம் பேர் பார்த்ததாகவும், மற்ற வீடியோக்களுக்கு முறையே 20 லட்சம், 15 லட்சம், 11 லட்சம் பார்வைகள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வீடியோக்களையும் சேர்த்து மொத்த பார்வைகள் சுமார் 1.5 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கொள்ளை சம்பவத்திற்கு முன்பு 3 முதல் 3.25 லட்சமாக இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் யார், கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம் எங்கே உள்ளது என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை? குழந்தையின் டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி திருப்பம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share