கழிவு அள்ளுற உள்ளங்களுக்கு கொடுக்கிற நன்றி கடனா இது? தரமற்ற உணவு..! நயினார் கொந்தளிப்பு..!
தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.
ஊதிய உயர்வு, நிரந்தர பணி மற்றும் தூய்மை பணியினை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராடி வந்தனர். அவர்கள் அங்கிருந்து நீதிமன்ற உத்தரவுபடி அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. அதில் முக்கியமானது தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டம். அதன்படி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவு தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து திமுக அரசு இழிவு படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில், திமுக அரசு சார்பாகத் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமான தரத்தில் இருப்பதாகவும், அதை உண்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் வெளியிட்டுள்ள காணொளியைப் பார்க்கையில் மனம் வலிக்கிறது என்று தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொட்டலங்களைக் குப்பை வண்டியில் கொண்டு வந்து இழிவுபடுத்தினார்கள், தற்போது திருநெல்வேலியில் கிட்டத்தட்ட கெட்டுப்போன உணவைக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறார்கள் என்று குறிப்பிட்டார். கொஞ்சம் கூட அருவருப்பு பார்க்காமல் சுற்றுப்புறக் குப்பைகளையும் கழிவுகளையும் கைகளால் அகற்றும் நல்ல உள்ளங்களுக்குத் திமுக அரசு காட்டும் நன்றிக்கடன் இதுதானா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கடையேழு வள்ளல்னு நினைப்போ? தரமான உணவுக்கூட கொடுக்க முடியலையா? அண்ணாமலை ஆவேசம்..!
“சமூகநீதி” வகுப்பு எடுக்கும் முதல்வர் ஸ்டாலினோ, அவரது புதல்வரோ, அல்லது ஏதேனும் ஒரு திமுக தலைவரோ தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்கும் உணவினை ஒருவாயாவது உண்பார்களா எனக்கு கேள்வி எழுப்பினார். தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லுங்கள் எனக் கேட்கும் தூய்மைப் பணியாளர்களைத் தரமற்ற உணவைக் கொடுத்து மடைமாற்றி விடலாம் என நினைக்கும் திமுக அரசு எத்தகைய குரூர மனம் படைத்த நிர்வாகமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு தரமில்லா உணவு..! இது தான் தாயுள்ளமா? அதிமுக கண்டனம்..!