கேமராவை பிடுங்கி போடுங்க.. நிதானத்தை இழந்த வைகோ! மன்னிப்புக்கோர நயினார் வலியுறுத்தல்..!
அரசியல் நாகரீகமற்ற தனது செயலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சில தொண்டர்கள் வெளியேறியதால் இருக்கைகள் காலியானதை செய்தியாளர்கள் படம் பிடித்தனர். இதனைக் கண்ட வைகோ, காலி இருக்கைகளை படமெடுப்பதை விமர்சித்து, செய்தியாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மதிமுக தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
செய்தியாளர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் ஒளிப்பதிவு கருவிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் சங்கம், வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசியலில் பல ஆண்டுகளாகப் பயணிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான வைகோ இவ்வாறு தரம் தாழ்ந்து நடந்து கொள்வது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல திமுக-வுடன் கூட்டணி வைத்து தனது நிதானத்தையும், கட்சியின் நிர்வாகத்தையும் வைகோ இழந்துவிட்டாரோ எனத் தோன்றுவதாகவும் அரசியல் நாகரிகமற்ற தனது செயலுக்கு அவர் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பது தான் நல்ல தலைவருக்கான மாண்பு என்றும் கூறினார்.
மேலும், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தி உள்ளார். வைகோ தனது ஆக்ரோஷமான மற்றும் உணர்ச்சிபூர்வமான பேச்சுகளால் புகழ்பெற்றவர். அவரது உரைகள் தமிழக மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
சமூக நீதி மற்றும் தமிழ் தேசியம்: வைகோவின் அரசியல் தத்துவம் சமூக நீதி, தமிழ் தேசியம், மற்றும் மாநில உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. இவர் தமிழகத்தின் நீர்ப்பிரச்சினைகள், கல்வி, மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அரசியல் அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த தலைவர் செய்தியாளர்களிடம் இப்படி நடந்து கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளா? பேசவே இல்லை... வைகோ பரபரப்பு தகவல்!!