கரூர் விஷயத்தில் ஜெட் மாதிரி இருந்த சிஎம்..! காலி பணியிடங்களையும் நிரப்பி விடுங்க... பட்டியலிட்ட நயினார்..!
அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
கரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உயிரிழந்தவர்களை அப்போது கண்டு கொள்ளாமல் ஓடி உடைந்து விட்டு தற்போது முதல்வரான பிறகு அவர்களுக்கு அரசு பணி வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அரசு பணிகளை மட்டுமே இலக்காக வைத்து இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசுப் பள்ளிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!
எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும் என்றும் அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊசலாடும் உயர்கல்வி... கண்டுக்காத காங். அமைச்சர்..! நயினார் தாக்கு.!