திருடு போன மரகத முருகன்..! அவ்ளோ மெத்தனம்..! மீட்டுக் கொண்டு வர நயினார் வலியுறுத்தல்..!!
திருடுபோன மரகத முருகனை மீட்டுக் கொண்டு வர நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலையும் வெள்ளிப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தமிழகப் பக்தர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படுவதும் சிலைகள் திருடப்படுவதும் ஜோசப் விஜய் அரசின் அறநிலையத் துறை மற்றும் காவல்துறையின் ஒட்டுமொத்தத் தோல்வியையே காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார். ஆன்மிக அடையாளங்கள் இவ்வாறு அழிக்கப்படுவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோவில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளையோ நவீன கண்காணிப்புக் கருவிகளையோ உறுதி செய்யாமல் மெத்தனம் காட்டும் முதல்வர் ஜோசப் விஜய் அரசின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அரசின் மாற்று அரசியல் என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதானா என்ற கேள்வி எழுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!
மேலும் முதல்வர் ஜோசப் விஜய் அரசு கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து ஒருதலைப்பட்சமாக இயங்கி வருவது அப்பட்டமாகத் தெரிகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் சபாநாயகர் சட்டசபையில் பைபிள் வசனங்களை வாசிப்பதும் நிதியமைச்சர் சட்டசபையில் ஜெபமாலையுடன் வலம் வருவதும் நடைபெறும் அதே வேளையில் இந்து மதத் திருக்கோவில்களில் இதுபோன்ற களவுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன என அவர் கூறியுள்ளார்.
சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தத் துடிக்கும் ஜோசப் விஜய், இந்துக்கள் வழிபடும் கோவில்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.எனவே உடனடியாகத் தனிப்படை அமைத்து திருடப்பட்ட மரகத முருகர் சிலையை மீட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். விலை மதிப்பற்ற இந்தச் சிலை கடத்தலின் பின்னணியில் இருக்கும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு சிதைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கத் தவறினால் பக்தர்களைத் திரட்டி தமிழக பாஜக சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மார்க்... நெல்லையில் நின்று விஜயை விளாசித் தள்ளிய நயினார் நாகேந்திரன்...!