தமிழகத்தை போதைக்காடாக மாற்றிய திமுக! நயினார் நாகேந்திரன் கடும் தாக்குதல்!
புத்தகத்தை ஏந்த வேண்டிய இளைஞர்கள், இன்று கஞ்சா போதையால் ஆயுதங்களை ஏந்திச் சமூக விரோதிகளாக உருமாறி வருகின்றனர் என்று நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போயுள்ளதாக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவரும், நெல்லை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் அவர்கள் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்தில் அரங்கேறிய சில அதிர்ச்சிகரமான வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் போதைப்பொருள் விவகாரம் ஒரு முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நயினாரின் இந்தப் புகார் அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
விழுப்புரத்தில் கஞ்சா போதையில் அராஜகம் செய்த கும்பலைத் தட்டிக்கேட்ட நான்கு வாலிபர்களை, அந்தப் போதைக் கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்கிய காணொளி வெளியாகிப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று, வீதியில் சென்ற சிறுவர்களையும் இளைஞர்களையும் ஆயுதங்களால் தாக்கி அச்சுறுத்திய வீடியோவும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியை நீடிக்காவிட்டால் அரசு ஊழியர்களின் ஊதியம் பறிபோகும்! நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் கஞ்சா புழக்கம் தலைவிரித்தாடுகிறது. புத்தகத்தை ஏந்த வேண்டிய இளைஞர்கள், இன்று கஞ்சா போதையால் ஆயுதங்களை ஏந்திச் சமூக விரோதிகளாக உருமாறி வருகின்றனர் என்று நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.
திமுக-வின் திறனற்ற நிர்வாகமே தமிழகத்தைப் போதைப்பொருட்களின் கூடாரமாக மாற்றியுள்ளது என்றும், மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழகத்தைக் காக்க திமுக-வை நிராகரிப்போம்! போதையில் இருந்து இளைஞர்களை மீட்போம்! என அவர் தனது தேர்தல் பிரசார முழக்கத்தை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மதுராந்தகம் பிரசாரத்தில் தமிழகத்தில் 'போதைப்பொருள் மாஃபியா'க்கள் வளர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்தப் பதிவு திமுக-விற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாத்தூர் தொகுதியில் போட்டியா? சஸ்பென்ஸை உடைத்த நயினார் நாகேந்திரன்!