தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் நல்லகண்ணு உடல்நிலை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், 101 வயதான போராளியுமான நல்லகண்ணுவுக்கு தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். நல்லகண்ணு கடந்த சில மாதங்களாக வயது மூப்பு சார்ந்த பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வந்தார்.
குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் வீட்டில் தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
ஆனால் சமீபத்தில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று சார்ந்த பிரச்னைகளுக்காக சிகிச்சை தொடங்கியது. பின்னர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், கடந்த ஒரு சில நாட்களாக அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.தற்போது அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாச ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நல்லக்கண்ணுவுக்கு தொடர் சிகிச்சை... இயற்கையோடு போராட்டம்... சிபிஐ வீரபாண்டியன் தகவல்..!!
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நல்ல கண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். நல்லகண்ணுவிற்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.
இதையும் படிங்க: நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!