நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?
பாரம்பரிய கட்டடத்தில் தற்போது முதல்வர் அலுவலகம் இயங்கி வரும் நிலையில், இடநெருக்கடி காரணமாக அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதல்வர் அலுவலகத்தை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்துக்கு பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை செயல்பட்டு வருகின்றன. பாரம்பரிய கட்டடத்தில் தற்போது முதல்வர் அலுவலகம் இயங்கி வரும் நிலையில், இடநெருக்கடி காரணமாக அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அரசு சார்பில் ரூ.6.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.5.54 கோடியில் முதல்கட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி பொதுப்பணித்துறை மூலம் ஆன்லைனில் கோரப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ராசி பில்டர்ஸ் நிறுவனம் ரூ.3.78 கோடியில் பணியை மேற்கொள்ள முன்வந்தது. அரசு மதிப்பீட்டைக் காட்டிலும் சுமார் 32 சதவீதம் குறைவான தொகையை குறிப்பிட்டிருந்த அந்த நிறுவனத்துக்கு பணிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்துக்கு கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள லிப்ட்டை கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தக்கூடாது என்றும், இரவு நேரங்களில் மட்டுமே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பகல் நேரங்களில் கட்டடத்தின் வெளிப்புறத்தில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பணிகளை தொடங்குவதில் ஒப்பந்த நிறுவனம் சிரமத்தை எதிர்கொள்வதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரத்தில், குறைந்த தொகையில் பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்றுள்ளதால், கட்டுமானப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடையே விலைப் போட்டி இருப்பதை பயன்படுத்தி செலவைக் குறைக்க முடியும் என ஒப்பந்த நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!