×
 

400 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 4 பேர் ஐசியூவில் அனுமதி?.. தனியார் கல்லூரி விடுதியில் நடந்தது என்ன?

குமாரபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் எக்ஸெல் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான கல்லூரியில் படித்து வரும் சுமார் 400 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

குமாரபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் எக்ஸெல் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான கல்லூரியில் படித்து வரும் சுமார் 400 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் பிரபல கல்வி குழுமமான எக்ஸெலில் கலை அறிவியல், பொறியியல் மற்றும் மருந்தாளுனர், நேச்சுரோபதி, சித்தா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கல்லூரிகள் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் சூழ்நிலையில், சுமார் 4000 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில அதிகாலை சுமார் 2 மணி அளவில்  கல்லூரி விடுதியில் தங்கி இருக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வந்து கல்லூரியில் ஆய்வு செய்த பொழுது மாணவர் விடுதியில் செயல்படும் உணவு கூடம் முழுவதுமே மிகவும் அசுத்தமாகவும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் வரக்கூடிய அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது மிகவும் அசுத்தமாகவும் புழுக்கள் நிறைந்ததாகவும் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையும் படிங்க: மணிக்கு 110 கி.மீ.வேகம்... கரையைக் கடந்தது மோந்தா புயல்... தற்போதைய நிலவரம் என்ன?

இதனிடையே, நேற்றிலிருந்தே இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் செயல்படும் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தகவலும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அதேசமயம் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகமானது கல்லூரிக்கு 4 நாட்கள் திடீர் விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் 4 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் எக்ஸெல் கல்லூரியில் இனி உணவு சமைப்பதற்கும், உணவு பொருட்களை விற்பதற்கும் இடைக்கால தடையானது விதிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி கல்லூரி குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கக்கூடாது என்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சுத்திகரிக்கப்பட்ட வாட்டர் பாட்டில் தண்ணீரை விநியோகம் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகமோ நேற்றும் மாணவர்களுக்கு அதே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரையே மாணவர்களுக்கு விநியோகித்துள்ளது. இதனால் நேற்று சிகிச்சை பெற்று வந்த மாணவர்கள் மீண்டும் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். 

கல்லூரி நிர்வாகம் கழிவு மேலாண்மையிலும் மெத்தன போக்கை கடைபிடித்தது தெரியவந்துள்ளது. கழிவுநீர், சமையலறை கழிவுகள் மற்றும் மாணவர்களின் கழிப்பறை கழிவுகள் என அனைத்துமே ஒரே வழியில் வெளியேற்றப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: என்கூட நேருக்கு நேர் வாதாட தயாரா? - அமைச்சர் முத்துசாமிக்கு சவால் விட்ட அன்புமணி ராமதாஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share