உயர்தர இலவச கல்வி..! நவோதயா பள்ளிகளுக்கு ஓகே சொல்லுங்க..! முதல்வர் விஜய்க்கு எச். ராஜா வலியுறுத்தல்..!!
நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டும் என H.ராஜா வலியுறுத்தினார்.
நவோதயா பள்ளிகள் மூலம் உயர்தர இலவச கல்வி கிடைக்க முதல்வர் விஜய் வழிவகை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தினார். ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளி ஆகும். மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகளாகும்.
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்தரமான CBSE கல்வியை 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இலவசமாகவும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மிக மிக குறைந்த கட்டணத்திலும் வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். 1986 ஆம் ஆண்டு நவோதயா பள்ளிகள் திட்டமானது நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு உண்டு உறைவிடப் பள்ளி என்கிற இலக்கை நிர்ணயித்து தொடங்கப்பட்டது. மாநில அரசு இத்திட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். பள்ளிகள் கட்ட மத்திய அரசு முழு நிதி ஒதுக்கீடு வழங்கும் என்று தெரிவித்தார். 6 ஆம் முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு ரூ.600 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், மாணவிகள், எஸ்சி/எஸ்டி மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு கட்டணத்தில் முழு விலக்கு உண்டு. 6-ஆம் மற்றும் 9-ஆம் வகுப்புகளில் சேர மத்திய அரசால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த பள்ளிகள் தேசிய அளவில் திறமையான மாணவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி தொடங்கப்பட்டு அந்த பள்ளிகள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் இருமொழிக் கொள்கை ஆதரவு மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு என்கிற காரணங்களைக் கூறி திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் வருவதை தடுத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!
இனியும் தமிழக முதல்வர் விஜய் காலதாமதம் செய்யாமல் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்தரமான இலவச கல்வி கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: CM விஜய் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்.? பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்ற மேயர் பிரியா..!