15 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட கொடூரம்! டிஜிபிக்கு பறந்தது நோட்டீஸ்! தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!!
திருவண்ணாமலை அருகே, 15 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக டி.ஜி.பி.,க்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியான இந்தச் சிறுமி, உறவினர் வீட்டு திருமணத்துக்காக அங்கு சென்றிருந்தார்.
கடந்த 19-ம் தேதி இரவு சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் சீம்பலம் அருகே எட்டு பேர் அவரை கடத்திச் சென்று கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது” என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தானாக முன்வந்து (சுவோ மோட்டு) விசாரணைக்கு எடுத்துள்ளது. சிறுமியின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட கவலைகளை முன்வைத்து, தமிழக டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: இந்தமுறை வாக்கு சதவீதம் கட்டாயம் அதிகரிக்கும்! களம் அப்படி! தேர்தல் கமிஷன் எதிர்ப்பார்ப்பு!
தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “15 வயது சிறுமி மீதான இந்த கொடூர தாக்குதல் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல். உடனடியாக போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதாவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து, நியாயமான காலவரையறைக்குள் விசாரணை முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவி, ஆலோசனை, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. ஐந்து நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை டி.ஜி.பி. தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே சம்பவம் தொடர்பாக போலீசார் வேறு கோணத்தில் விளக்கம் அளித்துள்ளனர். சிறுமி தனது காதலனுடன் சென்றபோது ஏற்பட்ட விபத்து தொடர்பான சம்பவம் என்றும், கூட்டுப் பலாத்காரம் நடக்கவில்லை என்றும் அவர்கள் மறுத்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட ஆதாரங்களை முன்வைத்து இந்த நிலைப்பாட்டை போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிந்த பிறகு விரைவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி உண்மை நிலவரத்தை தெரிவிப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சிறுமியின் பாதுகாப்பும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான உடனடி நடவடிக்கையும் தற்போது முக்கிய கோரிக்கையாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வாங்குன காசுக்கு அளவா கூவுங்க கமல்!! பிரசாரத்தில் திமுக, மநீம-வை வெளுத்த அண்ணாமலை!