ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு! நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை!
ரயிலில் 4 கோடி பணம் கைப்பற்றிய வழக்கில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு பதிவை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்ட வழக்கில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் மீது எழும்பூர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நாளை (ஆகஸ்ட் 12) நடைபெறவிருந்த குற்றச்சாட்டுப் பதிவை நிறுத்தி வைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயிலில் பயணம் செய்தவர்களிடம் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தைக் தேர்தல் பறக்கும் படையினரும் காவல் துறையினரும் கைப்பற்றினர். இப் பணம் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களால் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி (CB-CID) காவல் துறை, நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
எவ்விதப் போதிய ஆதாரங்களும் சாட்சியங்களும் இல்லாமல் சிபிசிஐடி காவல் துறை இயந்திரத்தனமாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. எனவே இவழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும்.
காவல் துறை தரப்பு வாதம்: சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இம் மனு குறித்து விரிவான பதிலறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என வேண்டுகோள் விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. லட்சுமி நாராயணன், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவிருந்த குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும், சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!