நெல்லை ஆணவக்கொலை வழக்கு: உடந்தையாக இருந்த சுர்ஜித் சகோதரர் அதிரடி கைது..!!
நெல்லை ஆணவக்கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் (25) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் சகோதரர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலை சம்பவம் கடந்த ஜூலை 27ம் தேதி அன்று பட்டப்பகலில் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்தது. கவின், சென்னையில் பணிபுரிந்து வந்தவர், விடுமுறையில் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திற்கு வந்திருந்தபோது, சுர்ஜித்தால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கவின், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியை 11 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், கவினை மருத்துவமனை வளாகத்தில் மிளகாய்ப் பொடி தூவி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் சுர்ஜித் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றியவர்கள், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை சாந்தி அல்வாவில் கிடந்த 'அந்த' உயிரினம்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 11ம் தேதி அன்று, நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிசிஐடி விசாரணைக் காவலை கோரியபோது, இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுர்ஜித் மற்றும் சரவணனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சிபிசிஐடி எஸ்.பி ஜவகர் முன்னிலையில் சுர்ஜித் மற்றும் தந்தை சரவணன் ஆகியோரிடம், தனித்தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சுர்ஜித்தை சம்பவ இடமான கேடிசி நகர் பகுதிக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி கவினை கொலை செய்தது எப்படி என்பதை, சுர்ஜித் சிபிசிஐடி போலீசார் முன் நடித்து காட்டினார். அவை அனைத்தையும் சிபிசிஐடி போலீசார் வீடியோ பதிவு செய்துகொண்ட நிலையில், வழக்கில் இந்த வீடியோ முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது, சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் ஒரு பகுதியாக, சுர்ஜித்தின் சகோதரர் ஜெயபாலன், சுர்ஜித்தின் சித்தி மகனாக அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜெயபாலனை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கொலை சமூகத்தில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீரத்தின் மறு உருவம்! சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு இபிஎஸ் மரியாதை…