மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு!
நேபாள பெருவெள்ள மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் மீட்புக் குழுக்களின் உதவி தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரிடர் பெருவெள்ளத்தில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையிலும், மீட்புப் பணிகளில் ஈடுபட வெளிநாடுகளின் மீட்புக் குழுக்களின் உதவி தேவையில்லை என நேபாள வெளியுறவுத்துறை நாளிதழ்களின் செய்திக் குறிப்புகளின்படி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
போதே கோஷி ஆற்றுப் படுகையில் ஏற்பட்ட தீவிர பனிப்பாறை வெடிப்பு மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளும் பேரழிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது அதிநவீன பேரிடர் மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்பி களமிறக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி கோரியிருந்தன. குறிப்பாக, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) அனுப்ப மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது.
எனினும், இந்த வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் கோரிக்கைகளை நேபாள அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக நேபாள வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கடந்த 2015-ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் போது ஏராளமான வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் களமிறங்கியதால் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக ரீதியாகப் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன.
இதையும் படிங்க: நேபாளத்தின் இயற்கை அழகில் தமிழர்கள்.. வைரலாகும் கடைசி ஃபோட்டோ..!! வேதனையில் உறவினர்கள்!!
அந்த அனுபவத்தின் அடிப்படையில், இம்முறை நேபாள ராணுவம் மற்றும் காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளே மீட்புப் பணிகளைத் திறம்பட முன்னெடுத்து வருகின்றன. எனினும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்கான சர்வதேச நிதி மற்றும் மனிதாபிமான உதவிகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, மலேசியா, உக்ரைன், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வெளிநாட்டினர் இன்னும் வெள்ளப் பகுதிகளில் தொடர்புகொள்ள முடியாமல் சிக்கியுள்ள சூழலில், வெளிநாட்டுப் படைகளின் நேரடி மீட்புப் பணிக்கு நேபாளம் விதித்துள்ள இந்த மறுப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளப்பெருக்கு..! தஞ்சையை சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை..! ஆட்சியர் பூங்கொடி அதிர்ச்சி தகவல்..!!