நிம்மதி செய்தி! நேபாளத்தில் சிக்கிய 20 தமிழர்கள் பத்திரமாக மீட்பு! பெயர் பட்டியல் வெளியீடு! முழு விவரம்!
இந்தியா சார்பில் 47.5 டன் அவசரகால நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட தமிழர்களின் பெயர் விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளதால், அவர்களது குடும்பத்தினருக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நேபாளத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேநேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 200 பேர் தங்களை மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திபெத்தின் கார்சான் பகுதியில் 95 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள் நேபாளத்தை கடப்பதற்காக பில்சா பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூடுல்போ பகுதியில் 13 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள் சஹா நகரை நோக்கி பயணித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரி குடும்பத்தினர்! அரசு உடனே மீட்க வேண்டும் என மகன் கண்ணீர் கோரிக்கை!
இதற்கிடையே, நேபாளத்தில் இன்னும் 288 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அவர்களில் திரிசூலி மின் திட்டத்தில் பணியாற்றும் 73 பேரும் அடங்குவர். அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக தமிழகத்தில் இருந்து சென்ற 37 பேர் மற்றும் 49 பேர் கொண்ட இரு குழுக்களும் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 பேர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 61 பேர், கேரளத்தைச் சேர்ந்த 33 பேர் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், இந்தியா சார்பில் 47.5 டன் அவசரகால நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
மீட்கப்பட்ட 20 தமிழர்களில் சிவரஞ்சனி, கற்பகம், மாறன், சாந்தி, முத்துக்குமரேசன், நவு கபிர்தாஸ், விஜயபுவனேஸ்வரி, மைதிலி, தியாகராஜன், கிருபாகரி, வள்ளிநாயகி, சத்யா, திருமாவளவன், கனகசபை, ராதை, ரத்தினகுமார், பூங்குழலி, பழனியப்பன், கலாமதி மற்றும் ரகுநாதன் ஆகியோர் உள்ளனர். மீதமுள்ளவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!