நேபாள வெள்ளம்: 85 தமிழர்கள் எங்கே? டிஎன்ஏ மாதிரிகள் அனுப்பியும் பதில் கிடைக்காத பரிதாபம்!
மாயமானவர்களை அடையாளம் காணும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அவர்களது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 85 யாத்ரீகர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது அவர்களது குடும்பங்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 85 பேரின் நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
மாயமானவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து அரசிடம் தகவல் கேட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து தங்கள் உறவினர்களை விரைந்து தேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதியும் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு, மாயமானவர்களின் நிலை குறித்து உடனடியாக தகவல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மாயமானவர்களில் குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்திரை மூலம் சென்ற 49 பேரும் அடங்குவர். அவர்களை அழைத்துச் சென்ற நிறுவனத்தின் உரிமையாளர் மாரவேல் நாகப்பனின் மகன் சத்ய நாராயணனும் காணாமல் போயுள்ளார்.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!
தனது மகன் எங்காவது உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையுடன் குடும்பம் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சத்ய நாராயணனின் ஒன்பது மாத குழந்தையும் தந்தையின் வருகைக்காக காத்திருப்பதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
மாயமானவர்களை அடையாளம் காணும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அவர்களது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 85 பேரில் 78 பேரின் உறவினர்களுடைய டிஎன்ஏ விவரங்கள் நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, மாயமான 85 தமிழக யாத்ரீகர்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் தமிழக அரசுகள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினருக்கு தெளிவான தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் இந்த காத்திருப்பு, மாயமானவர்களின் குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளையும் பெரும் சோதனையாக மாற்றியுள்ளது. “எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்ற ஒரே கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்! மீண்டும் கட்டமைக்க ரூ.45,400 கோடி தேவை – வெளியான அதிர்ச்சி கணக்கு!!