தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!
ஸ்மிருதி இரானி, பிப்லப் குமார் தேப் ஆகியோர் மீண்டும் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாஜகவிலும் தலைமை மாற்றம் குறித்த ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளன. தேசியத் தலைவர் நிதின் நபீன் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய நிர்வாக அணியில், பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பின்னணியில், தமிழக பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவராக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தேசிய அளவிலான மறுசீரமைப்பில் 13 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் மற்றும் 16 செயலாளர்கள் கொண்ட வலுவான அணி அறிவிக்கப்பட்டது. ஸ்மிருதி இரானி, பிப்லப் குமார் தேப் ஆகியோர் மீண்டும் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வசுந்தரா ராஜே, ராம் மாதவ் உள்ளிட்டோர் தேசிய துணைத் தலைவர்களாகப் பொறுப்பேற்றனர். கேரளா, உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் சமன்பாடுகள் மற்றும் கள சூழலைக் கருத்தில் கொண்டு தலைமை மாற்றங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. இதே வரிசையில் தமிழகத்திலும் அமைப்பு ரீதியான புதிய வியூகம் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!
தற்போது நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். முன்னாள் தலைவர் கே. அண்ணாமலைக்குப் பிறகு அவர் கட்சியை வழிநடத்தி வருகிறார். கள அனுபவம் மிக்கவரானாலும், அடுத்தகட்ட தேர்தல் நகர்வுகள், எதிர்க்கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், பெண்கள் வாக்குகளை ஈர்க்கும் உத்தியை வலுப்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி புதிய தலைமை தேவைப்படுவதாக மேலிடம் கருதுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானதி சீனிவாசன் ஏபிவிபி மாணவர் இயக்கத்திலிருந்து தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளுடன் இணைந்து பணியாற்றியவர். மத்திய தேர்தல் குழு மற்றும் தேசிய மகளிர் அணித் தலைவராக பணியாற்றியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றவராகக் கருதப்படுகிறார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அனுபவமும் அவருக்கு உள்ளது.
வழக்கறிஞர் பின்னணி கொண்ட இவர், கூட்டணிக் கட்சிகளுடனும் மென்மையான ஆனால் உறுதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் தலைவராக அறியப்படுகிறார். இந்த மாற்றம் தொடர்பான ஆலோசனைகள் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பாஜக வட்டாரங்களில் நிலவுகிறது. தமிழக அரசியல் களத்தில் பெண்கள் பங்களிப்பை வலுப்படுத்தவும், அமைப்பு ஒற்றுமையை மேம்படுத்தவும் இந்த நியமனம் உதவும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: "ரத்தக்கண்ணீரில் தமிழகம்"..! 100 நாள் சாதனை..! முதல்வர் விஜய் மீது வானதி தாக்கு.!!