மின்வாரிய கோப்புகள் மாயம்..! திருடிவிட்டால் தப்பித்து விட முடியாது... அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை..!!
கோப்புகளை திருடிவிட்டால் தப்பித்து விட முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டெண்டர்கள் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில், அதாவது வார இறுதி நாட்களில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18 கணினிகளில் இருந்த ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கடந்த மாதம் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின்னர் திருட்டு நடைபெற்று இருப்பதால் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். ஐந்து வருட டெண்டர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட தரவுகளின் பேக்கப்களை எடுக்க வேண்டிய வேலை இருப்பதாக கூறினார்.
எத்தனை ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டு இருக்கிறது என்பது விசாரணையின் முடிவில் தெரியப்படுத்துகிறோம் எனக் கூறினார். ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். என்ன நோக்கத்துடன் திருடப்பட்டு இருக்கிறது என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். திருடிவிட்டால் தப்பித்து விட முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!