ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!
ஜோசியக்காரர் என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் முதலமைச்சர் விஜய் அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை மையமாகக் கொண்டு தொடங்கியது.
பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், சில சமயங்களில் பாடல்கள் பாடுவதால் சட்டப்பேரவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் போலத் தோன்றுவதாகவும் கிண்டலடித்தார். அத்துடன், முதலமைச்சர் விஜய் தனது மேசையில் மூன்று முக்கிய ஆவணங்கள் இருப்பதாக முன்னர் கூறியிருந்ததை நினைவுபடுத்தினார்.
அந்தக் கோப்புகளைத் திறந்து நடவடிக்கை எடுக்க ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். “ஃபைல்களைத் திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டபோது, அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தனது மேசையில் உள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் முதலமைச்சர் திறப்பாரா என்றும் அவர் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: சட்டமன்றமா.? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா.? சட்டப்பேரவை நிகழ்வுகளை விமர்சித்த உதயநிதி.!!
இந்த விமர்சனத்திற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்தார் அமைச்சர் நிர்மல் குமார். உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு” என்று கூறினார். மேலும் “மஞ்சள் துண்டு அணிந்தவர்களையும் பார்த்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கருத்து, கடந்த காலத்தில் திமுக தலைவர்கள் மஞ்சள் துண்டை அடையாளமாக அணிந்திருந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினரின் ஜோசிய விமர்சனத்தை மீண்டும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்தது போல அமைந்தது.இந்தப் பரிமாற்றம் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு"..! எண்ணூர் கழிமுகம் விவகாரம்..! சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.!